தெம்மாங்கு பாடி, உயிர் கொடுத்தார்கள் வாஞ்சையில்,
எனக்கு, காளை பூட்டிய ஏர் உழுத நஞ்சையில்;
நெகிழ்ந்தேன் நான் அவர்கள் காட்டிய அன்பெனும் உரத்தில்,
இசையான தெம்மாங்கு சுரத்தில்;
தென்றலின் இசைக்கு தலையாட்டி மகிழ்ந்து,
வளர்ந்தேன் நான் நித்தமும் வளர்த்தவர்களை நினைந்து;
பருவமடையும் நாள் வந்தது, பூவாக விரும்பிய நான் நாத்து,
என் கால்களில் வந்தடையும் காவிரியை எதிர்பார்த்து;
வரவில்லை காவிரி, தரவில்லை தண்ணீரை பரவி;
மனம் சோராமல் காத்து நின்றேன் வயல்வெளியில்,
நிலவோ தேய்ந்து வளர்ந்தது நாளொரு வண்ணமாய் வான்வெளியில்;
அப்போதும் உயிர் கொண்டுதான் இருந்தேன் ஆனால்,
நான் இறந்துதான் போயிருந்தேன் எனக்கு உயிர் கொடுத்தவர்,
என் நிலை கண்டு தன் உயிர் மாய்த்த பின்!